" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

01/11/2014

தியானம் புரிவோம்
Swamiji_meditation
நீராடி, சமயச் சின்னங்களைத் தரியுங்கள்.
அமைதியான இடத்தில் கம்பீரமாக, இயல்பாக அமருங்கள்.
உங்கள் கைகளைக் கூப்பி நெஞ்சின் மீது வைத்திருங்கள்.
அடிவயிறு நிறையும் வரை மூச்சை உள்ளே இழுத்து வெளி விடுங்கள். கண்களை மெல்ல மூடுங்கள்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் தத்துவமான ஓங்கார ரூபமாக விளங்கும் பரம்பொருளான உங்களது இஷ்டதெய்வத்தைத் தியானியுங்கள்.
பகவானே, தாங்கள் என் உணர்வில் கலந்து அருளுங்கள் என உங்கள் இஷ்டதேவதையை வேண்டிக் கொள்ளுங்கள்.
ஓம் என மூன்று முறை உரக்க முழங்குங்கள். ஓங்காரத்தை உச்சரிக்க உச்சரிக்க அடிவயிறு காலியாகட்டும்.
உடல் – மனம் – புத்தி – பிராணன் – ஆன்மா ஆகியவை இறைவன் நமக்குத் தந்த வரப்பிரசாதங்கள். இவை ஒன்றோடொன்று இணக்கமாக இருக்க வேண்டும்.
முன்னது பின்னதின் ஆளுகைக்கு உட்பட வேண்டும். அதாவது உடலை மனதால் ஆள வேண்டும். மனதைப் புத்தியால் ஆள்வதற்குப் பிராணனின் போக்கைச் சீர் செய்வோம்.
மீண்டும் ஒருமுறை அடிவயிறு நிறையும் வரை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
உங்கள், உடல், மனம், புத்தி ஆகியவை ஸ்திரமாகட்டும்.
கயிலாயத்தில் கடுங்குளிரில் சிவபெருமானின் தியானநிலை திருவுருவம் போல் நீங்களும் இருப்பதாக பாவியுங்கள்.

சிவபெருமான் ஆழ்ந்த தவம் புரிந்தாலும் அவரது திருப்பாதம் சூடாக இருக்கும்; அந்தப் பாதங்கள் போல் உங்களது கால்களும் வலுவாகவும் சூடாகவும் இருக்கட்டும்.
சிவபெருமானின் இதயம் பேரமைதியில் திளைத்திருக்கும். அவரது திருவயிறு போன்று நமது வயிறும் மிருதுவாகவும், இருப்பது தெரியாதது போலும் விளங்கட்டும்.
ஆழ்ந்த தியானம் செய்தும் சிவபெருமானின் சிரசுப் பகுதி என்றும் சூடாகாமல் குளிர்ந்தே விளங்கும். அதுபோல், நீங்கள் எது செய்தாலும் உங்கள் தலையும் குளிர்ச்சியாக இருக்கட்டும்.
இப்போது உங்களது உடலில் எந்தத் தளர்வும் இல்லை. உங்களுக்கு நோயே இல்லை; இதயம் படபடப்பின்றிச் சீராக இயங்குவதாக நினையுங்கள்.
மீண்டும் ஓங்காரத்தை உச்சரித்து, மூச்சை உள்ளிழுங்கள்; அப்படிச் செய்யும்போது நான் திடகாத்திரமாகவே, ஆரோக்கியமாகவே இருக்கிறேன் என எண்ணி பாவனா பலத்தில் நில்லுங்கள்.
இந்த பாவனாபலத்துடன் மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளுங்கள். பின் மெல்ல மூச்சை வெளிவிடுங்கள்.
சரீரமாத்யம் கலு தர்ம சாதனம் – தரும காரியங்களுக்குப் பயன்படுவது உடல் என்ற மகனீயர்களின் வாக்கிற்கேற்ப இனி நான் இந்த உடலைச் சரியாகப் பேணுவேன் என்று உறுதிமொழி மேற்கொள்ளுங்கள்.
உங்கள் உடலில் எந்தப் பகுதி உங்களுக்குத் தொந்தரவு தருகிறதோ, அதன் மீது கவனம் செலுத்துங்கள். அப்பகுதி ஆரோக்கியமாகி ஆண்டவனின் சேவைக்குப் பயன்படட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு மெல்ல உங்கள் கவனத்தை மனதின் மீது செலுத்துங்கள்.
மனதில் கணக்கற்ற எண்ணங்கள் கண்ணாமூச்சி காட்டலாம். மனம் சஞ்சலப்படலாம். துக்கங்கள், துயரங்கள், ஆசைகள், அவமானங்கள் போன்றவை வந்து உங்கள் நெஞ்சங்களில் அலைமோதலாம். அதற்கெல்லாம் அசையாதீர்கள்.
வாழ்க்கை எனும் நதி உங்களைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறது.
கரைபுரண்டு ஓடும் ஆற்றின் நடுவே நிற்கும் ஒரு மரம் அல்லது மண்டபமாக உங்களை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
கவலை, வீண் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், வருத்தம், வெறுப்பு, பிறர் குறை கூறியது, ஆசைகள், பிறரது அலட்சியங்கள், பிறர் வதைத்தது, வாழ்த்தியது என எதுவானாலும் அவற்றைச் சற்றுத் தள்ளி வையுங்கள்.
அவை எல்லாம் மனம் எனும் ஆற்றில் வரும் நுரைகளே; நீங்களோ அசையாத மண்டபம்.
என் மனதின் ஸ்திரத்தன்மையே என் வாழ்வின், என் உடலின், மனதின், ஆரோக்கியத்திற்கு ஆணி வேர் என்று உங்களுக்கு நீங்களே உரக்க வாய் விட்டு ஓரிரு முறை கூறிக் கொள்ளுங்கள்.
இப்போது கவனத்தை உங்களது புத்தியில் செலுத்துங்கள். பின்வருவனவற்றைக் கூறி உங்கள் புத்திக்கு அறிவுறுத்துங்கள்:
எனக்குள் பல தெளிவின்மை வந்து சென்றாலும், குழப்பங்கள் என்னைக் குறி வைத்துத் தாக்கினாலும், இறைசக்தி எனக்குள் புத்திசக்தியாக, விவேக சக்தியாக விளங்குகிறது.
இனி நான் என்னை உடல் என்று கருத மாட்டேன். மனமே நான் என்று கருதி மயங்க மாட்டேன்.
சிலவற்றைக் கற்றதாலேயே என்னை நான் அறிவாளி என்று எண்ணி ஏமாற மாட்டேன்.
தளர்ந்து போன உடலல்ல நான்;
குழம்பித் தவிக்கும் மனமல்ல நான்;
ஓர் இலக்கும் ஓய்வுமின்றி எப்போதும் யோசிப்பவனும் அல்ல நான். இந்த மூன்றையும் கடந்த புனிதமான, பிரகாசமான ஓர் ஒளி நான்.
சிதானந்த ரூப சிவோஹம், சிவோஹம்.
இனி, அந்த உண்மையான எனது இயல்பு நிலையிலிருந்து இந்த உலகைப் பார்ப்பேன். என் புனித நிலையிலிருந்து எல்லாவற்றையும் செய்வேன்.
இனி, எத்தனை முறை எனது இயல்பான புனித உணர்வை இழந்தாலும் அத்தனை முறையும் நான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வேன், என் இஷ்டதெய்வத்தின் குழந்தை நான் என்று.
ஓம் சாந்தி. சாந்தி சாந்தி:

No comments:

Post a Comment